ஆசிய போட்டிகளில் பாய்மரப் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாய்மரப் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த வீரர் விஷ்ணு சரவணன் அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் 23.09.2023 அன்று முதல் 08.10.2023 அன்று வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டையை அடுத்த சலமநத்தம் கிராமத்தைச் சார்ந்த பாய்மரப் படகு வீரர் விஷ்ணு சரவணன் பாய்மரப் படகுப் போட்டியில் பங்குபெற்று, வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் வேலூரில் பிறந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் சுபேதாராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சுபேதார் மேஜர் சரவணனும் ஒரு பாய்மரப் படகு வீரர் ஆவார். இவரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற்று தேசிய சாம்பியனாக இருந்துள்ளார். மேலும், இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். விஷ்ணு சரவணனின் தங்கை ரம்யா சரவணன் அவர்களும் பாய்மரப் படகுப்போட்டி வீராங்கனை ஆவார். இவரும் ஆசிய பாய்மரப் படகுப் போட்டியில் இறுதி தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் ட்விட்டர் வாழ்த்து; சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாய்மரப் படகுப் போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பி விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணன் அவர்களை பாராட்டுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் அவர் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

The post ஆசிய போட்டிகளில் பாய்மரப் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: