வித்யரத்னா பி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு

சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வித்யரத்னா பி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நெகிழிப் பயன்பாட்டை ஒழிப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பாக ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் 26.09.2023 அன்று அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வித்யரத்னா பி.டி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர் நெகிழி ஒழிப்பு சம்மந்தமான பதாகைகளுடன் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

மேலும், மாணவ, மாணவியருக்கு நெகிழி ஒழிப்பு சம்பந்தமான வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர், மாணவ மாணவியர் அனைவருக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒத்துழைப்புடன் விலையில்லா மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி. சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் எம். ராதிகா, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வித்யரத்னா பி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: