மதிய நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து என்பது நம் முன்னோர்கள் வாக்கு. நாம் சாப்பிடும் உணவை கொண்டே நமது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பொதுவாக, காலை நேரத்தை விட மதிய நேர்த்தில்தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகளவில் பசி எடுக்கும். இதனால், கிடைக்கும் கண்டதையும் சாப்பிட்டால், உடல் நலம் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சில உணவுகளை மதிய நேரத்தில் தவிர்ப்பது நல்லது. அவை என்னவென்று பார்ப்போம்.

சூப் வகைகள் : மதிய நேரத்தில் சூப் வகைகளை தவிர்க்க வேண்டும். காரணம், பொதுவாக சூப் வகைகள் சாப்பிட்டவுடனேயே நல்ல பசி எடுக்க தொடங்கிவிடும். ஏற்கெனவே பசியோடு இருக்கும்போது சூப் சாப்பிடுவதால் பசி அதிகரித்து, அதிகமான அளவில் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் உடல் பருமன்தான் உண்டாகும்.

பர்கர் : பர்கர் போன்ற ஸ்நாக் வகை உணவுகளை இப்போதெல்லாம் அதிக அளவில் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது மிக மோசமான ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பர்கர், பீட்சா போன்ற உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்புச் சத்துகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அது இறுதியில் உடல் பருமனையே
உண்டாக்கும்.

சாலட் : சாலட்டில் மிக குறைவான அளவில்தான் கலோரிகள் உள்ளன. எனவே இது காலை நேரத்திற்கான உணவாக இருக்குமே தவிர, மதிய நேரத்திற்கு ஏற்ற உணவாக இருக்காது. ஏனென்றால், அதிக பசி இருக்கும்போது, சாலட் வகைகள் முழுமையாக பசியை தீர்க்காது. சான்விட்ச் : எப்போதுமே பிரெட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.

நூடுல்ஸ் : நூடுல்ஸ் உணவை மதிய நேரத்தில் சாப்பிடக் கூடாது. இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்கக்கூடிய தன்மை பெற்றது. இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தைப் பாதித்து எடையை அதிகரிக்க செய்யும். முக்கியமாக இதில் சத்துக்கள் மிக குறைவாகவே உள்ளது.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்

The post மதிய நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்! appeared first on Dinakaran.