வாணியம்பாடியில் மழை நீர் தேங்கிய குழியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழை நீர் தேங்கிய குழியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் சாலை பணிகளுக்கு மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மோனிகா, 15 வயது சிறுமி ராஜலட்சுமி ஆகியோர் பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளம் தோண்டி மூடாமல் கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், பள்ளம் இருப்பது தெரிந்தும் அதை கவனிக்க தவறிய பள்ளி நிர்வாகம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக அஜாக்கிரதையாக, பாதுகாப்பற்ற முறையில் அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொண்டதாக ஒப்பந்ததாரர் பாலாஜி என்பவர் மீதும் இதை கவனிக்க தவறிய ஊராட்சி செயலாளர் தேவன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 சிறுமிகளின் சடலங்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post வாணியம்பாடியில் மழை நீர் தேங்கிய குழியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: