1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை: குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெற்றவர்களுக்கு முதல்வரின் வாழ்த்து கடிதம் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம்குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹ 1,000 அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உரிமைத் தொகை பெற்ற அனைத்து பெண்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில், ‘‘வணக்கம். தங்களது அன்புக் கட்டளையால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம். பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. நகைக் கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள்.

புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தி வருவது ‘திராவிட மாடல் அரசு’ என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன. இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம் தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான ‘மகளிர் உரிமைத் திட்டம்’. இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். என்றும் அன்புடன் மு.க. ஸ்டாலின்’’ என வாழ்த்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை: குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் வாழ்த்து கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: