குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 புதிய வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹150 கோடி செலவில் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், கிராம பொதுமக்கள் வரி, கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காட்பாடியில் கடந்த பிப்.1ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.அதன் தொடர்ச்சியாக, 8 மாத காலத்தில் முதற்கட்டமாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹150 கோடி செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள vptax.tnrd.tn.gov.in என்ற வரி செலுத்தும் முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் தொடங்கி வைத்தார். கிராம ஊராட்சிகள் கணக்குகளை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையினை இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் டிஎன்பாஸ் என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

The post குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: