திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 9ம் நாளான இன்றுகாலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலையப்பசுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கற்பக விருட்சம், கருடன், சிம்மம், அனுமந்த வாகனம், தங்கத்தேர், சூரிய பிரபை, சந்திர பிரபை என பல்வேறு வாகனங்களில் காலையும், இரவும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8ம் நாளான நேற்றுகாலை மகா தேரோட்டமும் இரவு கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9ம் நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். அங்கு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு தெப்பக்குளத்தில் புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி, கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின் நிறைவாக இன்றிரவு 9 மணிக்கு தங்க கொடி மரத்தில் இருந்து பிரம்ேமாற்சவ கொடி இறக்கப்படுகிறது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: