நிரந்தர தீர்வு தேவை

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான கடலோர பகுதி தமிழ்நாடு ஆகும். 11 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இந்தியாவின் மொத்த மீன்பிடிப்பு 10 முதல் 12 சதவீதம் தமிழ்நாட்டில் தான். ஆனால் ஒவ்வொரு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன் பிடித்து கொண்டு ஊர் திரும்புவது சில நேரங்களில் நிச்சயமற்ற நிலை ஏற்படுகிறது. ஒருபக்கம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையராலும் மற்றும் இலங்கை மீனவர் கும்பலாலும் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்களை இழப்பதுடன் சில நேரங்களில் அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகை சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக்கம்பி, கட்டை, சுத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிவிட்டு அவர்களது மீன்கள், வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி ஆகியவற்றை பறித்து கொண்டு செல்வது தொடர்கதையாக நீள்கிறது. தமிழக மீனவர்களை தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாக கொண்டுள்ளது. தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியவில்லை. கைது, தாக்குதல், சித்ரவதை தொடரத்தான் செய்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு மத்தியில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் அடக்குமுறைகள் இன்னும் அதிகமாகியிருக்கிறது.

மீனவர்கள் கைது, தாக்குதல், சிறைச்சாலை என்பதை தாண்டி, மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசு பறித்து செல்வது அதிகமாகியிருக்கிறது. மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை தருவதில்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும் வலையும்தான். படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் இலங்கை அரசின் வழக்கமாக உள்ளது. இலங்கை மீனவர் கும்பல், இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் தவிர்த்து 2020ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 49 தாக்குதல் சம்பவங்களை நடத்தியுள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

604 மீனவர்களையும், 24 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. விலையுயர்ந்த மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து கொண்டு திரும்பி கொடுக்காததால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாக்கும் வேலையில் இலங்கை அரசு இறங்கி உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல், கைது சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார். அதில் ஒன்றிய அரசு இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.

ஆனால் ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளாமல் மெத்தனப்போக்கை கையாண்டு வருகிறது. ஒன்றிய அரசு மனம் மாறி, பிரச்னையை தீர்க்க இரு நாட்டின் கடற்படை ராணுவ மாநாடு நடத்த வேண்டும். அப்போது இரு நாட்டு கடற்படை ராணுவ வீரர்கள் அவர்களது கடல் எல்லையில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். எல்லை தவறி செல்லும் மீனவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலைக்கு நிரந்தர தீர்வாகும்.

The post நிரந்தர தீர்வு தேவை appeared first on Dinakaran.

Related Stories: