டிக்கெட், ஆதார் கார்டில் வேறு பெயர்கள் விமானத்தில் செல்ல பயணிக்கு தடை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மதுரை செல்ல வந்த விமான பயணியின் ஆன்லைன் டிக்கெட்டில் ஒரு பெயரும், ஆதார் கார்டில் வேறு பெயரும் இருந்ததால், பயணியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:55 மணிக்கு, மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின், டிக்கெட் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாவா மொய்தீன் என்ற பெயரில், ஆன்லைனில் டிக்கெட் எடுத்து, வெப் செக் செய்து, போர்டிங் வாங்கிய ஒருவர் இந்த விமானத்தில் மதுரை செல்ல வந்தார்.

அதிகாரிகள், அந்தப் பயணியின் ஆன்லைன் விமான டிக்கெட் மற்றும் அவருடைய ஆதார் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்தனர். ஆதார் கார்டில் சர்மேஷ் கான் என்ற பெயர் இருந்தது. ஆனால் விமான டிக்கெட்டில் பாவா மொய்தீன் என பெயர் இருந்தது. இதனால், அந்தப் பயணியை விமானத்தில் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தியதில், நான் விமான நிலையத்திற்குள் நுழையும் போது கேட்டில் நின்ற சிஐஎஸ்எப் அதிகாரிகள் என்னுடைய விமான ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டை பார்த்து விட்டு தான் என்னை உள்ளே அனுப்பினர். அப்படி இருக்கையில், நீங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்க மறுப்பது ஏன் என்று கேட்டார்.

அவர்கள் தவறுதலாக அனுப்பி விட்டார்கள் என்பதற்காக, நாங்களும் அதைப்போன்ற தவறை செய்ய முடியாது. விமான டிக்கெட், ஆதார் கார்டு இரண்டிலும் ஒரே பெயர் இருந்தால்தான் பயணம் செய்ய அனுமதிக்க முடியும் என்றனர். இதனால் அந்த பயணி, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி விசாரித்த போது, விமான நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் வேறு வேறு பெயர்கள் இருந்ததை கவனிக்காமல், தவறுதலாக உள்ளே அனுப்பிவிட்டது தெரியவந்தது.

The post டிக்கெட், ஆதார் கார்டில் வேறு பெயர்கள் விமானத்தில் செல்ல பயணிக்கு தடை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: