ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் எதிரொலி புதுப்பட்டினம் வணிகர் சங்க தற்காலிக தலைவர் தேர்வு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் எதிரொலியால், புதுப்பட்டினம் வணிகர் சங்க தற்காலிக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம், பக்கிங்காம் கால்வாயின் இருபுறம் மற்றும் பழைய விட்டிலாபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காய்கறி, பழக்கடை, பூக்கடை ஆகிய கடைகள் வைத்திருந்ததால் புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறையினரும் இணைந்து கடந்த வாரத்தில் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை இரண்டு கட்டங்களாக அகற்றினர்.

இந்நிலையில், உரிய அவகாசமின்றி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தன்னிச்சையாக அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதாகவும், ஆக்கிரமிப்புக்குள்ளான நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் காதர் உசேன் தலைமையில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், வணிகர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், வணிகர் சங்க துணை தலைவர் அப்துல் உசேன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தின்போது, ‘புதுப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் காதர் உசேனும், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபாலும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களுக்குள் உள்ள உட்கட்சி பிரச்னையில் வணிகர் சங்க தலைவர் காதர் உசேன் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் வணிகர்களையும், நிர்வாகிகளையும் மதிக்காமல் தாந்தோன்றி தனமாக கடையடைப்பு நடத்தி பெரும் பதட்டத்தையும், குழப்பத்தையும் எற்படுத்தியுள்ளார். இதனால் வணிகர் சங்க தலைவரான காதர் உசேனை மாற்றும் விதத்தில் மாவட்ட வணிகர் சங்க துணை தலைவரும், புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பக்கீர் முகமது என்பவரை புதுப்பட்டினம் வணிகர் சங்க தற்காலிக தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் எதிரொலி புதுப்பட்டினம் வணிகர் சங்க தற்காலிக தலைவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: