அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொதுப்பணித்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவகம், மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம், பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்தல், சுகாதாரத் துறையின் கட்டடப் பணிகள் மற்றும் ஜெய்கா நிதி உதவி பெறும் மருத்துவ கட்டட கட்டுமான பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிக் கட்டடப் பணிகள், நீதிமன்ற கட்டடப் பணிகள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் தரத்துடன் மேற்கொள்ளவதுடன், கட்டுமான பொருட்களின் ஆய்வக பரிசோதனைகள், களப் பரிசோதனைகள் மேற்கொண்டு அதன் ஆவணங்கள், அறிக்கைகள், பணித்தளத்தில் தயார் நிலையில் ஆய்விற்கு வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கிய அரசு கட்டடங்களில் இயங்கி வரும் மின் தூக்கி, குளிர்சாதன வசதி மற்றும் இதர மின் வசதிகள் அவ்வப்போது முறையாக பராமரித்தல் வேண்டும். மின் பணிகளுக்கான ஒப்பந்தம், சிவில் பணிகளுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யும் போதே இறுதி செய்ய வேண்டும். நினைவக கட்டட பணிகள் மற்றும் சிலை அமைக்கும் பணிகளுக்கான அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தனியார் கட்டடங்களுக்கு வழங்கப்படும் கட்டட உறுதிச் சான்று குறித்த விவரங்கள் அவ்வப்போது தெரிவித்தல் வேண்டும்.

பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்களுக்கு பணிகள் தொடங்குவதற்கு முன்பு பெறப்பட வேண்டிய கட்டட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட கட்டட அனுமதிகளுக்கு உடனடியாக விண்ணப்பித்து, அனுமதி பெற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், “தரமே நிரந்தரம்“ என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி. சத்தியமூர்த்தி, அரசு சிறப்பு அலுவலர் ஆர். விஸ்வநாத், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே. ஆயிரத்தரசு இராஜசேகரன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எ. வள்ளுவன், தலைமை கட்டடக் கலைஞர் எம். இளவேன்மாள் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொதுப்பணித்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: