நெல்லை : நெல்லை மாவட்டம், மாநகரத்தில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று நிர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் வைத்து பூஜிக்கப்பட்ட 70 சிலைகள் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகே தனியார் நிலத்தில் குளம் அமைத்து விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 18ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர பகுதியில் 70 சிலைகளும், மாவட்டத்தில் 130 சிலைகளும் என 200 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. சில பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று நீர்நிலைகளில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைத்தால் தண்ணீர் மாசுபடும் என்பதால் விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலைகளை தாமிரபரணியில் கரைக்க தடை விதித்தது.
விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்து ஒருவாரம் பூஜிக்கப்பட்ட பின் விநாயகர் சிலைகள் நேற்று மாலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டம், மாநகரம் பகுதிகளில் சுமார் 200 சிலைகள் பாஜ, இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் பாளை, மேலப்பாளையம், டவுன், பேட்டை, தச்சநல்லூர் பகுதியில் சிறப்பு வழிபாட்டுக்கு பின் மாலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
இதைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகே சிலை பொறுப்பாளர்கள் போலீசாரிடம் சிலைகளை ஒப்படைக்க வேண்டும். பின்னர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின் பேரில் பாளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் சுந்தரம் உள்பட 25 தீயணைப்பு நீச்சல் வீரர்கள் அடங்கிய குழுவினர் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் விநாயகர் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் சிலைகளை விஜர்சனம் செய்தனர்.
விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் போலீசார் சிசிடிவி கேமிரா மூலம் காண்காணித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், மாநகர பகுதிகளில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post 2500 போலீசார் பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்தில் 200 விநாயகர் சிலைகள் விஜர்சனம் appeared first on Dinakaran.
