நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்து பர்னிச்சர் கடைக்குள் புகுந்த மினி லாரி

*பெண்கள் உள்பட 10 பேர் உயிர் தப்பினர்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்து பர்னிச்சர் கடையில் மினி லாரி மோதியது. இதில் கடையின் முன் பகுதியில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து, நாகர்கோவில் அருகே உள்ள பன்றி பண்ணைக்கு உணவு கழிவுகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி நேற்று காலை வந்தது. காலை 6 மணியளவில் இந்த லாரி, நாகர்கோவில் ஒழுகினசேரி பாலத்தில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தை கடந்து பழையாற்றின் கரையை யொட்டி உள்ள ஒரு பர்னிச்சர் கடைக்குள் புகுந்தது. அந்த கடையின் முன் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிலர் படுத்திருந்தனர். இவர்கள் வாகனத்தின் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடினர். இதில் மதுரை பகுதியை சேர்ந்த கண்ணன் (19) என்பவர் கால் நசுங்கி படுகாயம் அடைந்தார்.

விபத்து நடந்ததும், டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பினார். கடையின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. கால் நசுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது தெரிய வில்லை. லாரி மோதிய பர்னிச்சர் கடையின் முன் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தூங்குவது வழக்கம். இவர்கள் அனைவரும் மதுரையை சேர்ந்தவர்கள் ஆவர். குறி சொல்தல், கூலி வேலை செய்தல் போன்றவற்றுக்காக வரும் இவர்கள், ஆங்காங்கே உள்ள கடைகளின் முன் தான் படுத்து உறங்குவது வழக்கம். விபத்து நடக்கும் 10 நிமிடங்களுக்கு முன் தான் முன் பகுதியில் படுத்திருந்த பலர் எழுந்து டீ குடிக்க சென்றனர். அவர்கள் வழக்கமான இடத்தில் படுத்திருந்தால், இந்த விபத்தில் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அங்கிருந்தவர்கள் கூறினர். தற்போது கண்ணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரால் இனி தொழில் செய்ய முடியாது. எனவே அதற்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்து பர்னிச்சர் கடைக்குள் புகுந்த மினி லாரி appeared first on Dinakaran.

Related Stories: