சூரியன் வணங்கிய தலங்கள்

* ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இத்த புஷ்பரதேஸ்வரரை வணங்கி சூரிய பகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரங்கம் நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர்.

* கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள திருமங்கலக்குடியில் அருளும் பிராணநாதேஸ்வரரும், அன்னை மங்களாம்பிகையும், நவகிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர்கள். சூரியனார் கோயிலை தரிசிக்குமுன்பு இத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

* திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள, நவகயிலாயங்களில் ஒன்றான பாபநாசம், சூரிய தலமாக போற்றப்படுகிறது. ருத்ராட்சத்தால் ஆன சிவ லிங்கத் திருமேனி இங்குள்ளது. சூரிய பகவான் வணங்கி பேறு பெற்ற தலம்.

* சென்னை, ராமாபுரம் அருகே குன்றத்தூர் கெருகம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓர் சூரிய தலம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசனை சூரிய பகவான் வணங்கியிருக்கிறார். ஆறு வாரங்கள் தொடர்ந்து ஈசனை வணங்க தடைகள் தவிடுபொடியாகின்றன.

* திருவாரூர் – மயிலாடுதுறை சாலையிலுள்ள பேரளத்திற்கு அருகே உள்ளது திருமியச்சூர். சூரியனின் ஒளி நல்லவை கெட்டவை இரண்டிற்கும் உதவுவதால் கெட்டவைக்குரிய பாவம் சூரியனின் நிறத்தை மங்கச்செய்தது. சூரியன் இங்கு தவம்செய்து மீண்டும் தன் சுயநிறம் பெற்றாராம்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் முருக்க மர நிழலில் ஜோதிலிங்கமாய் அருள்கிறார். இங்கு சூரியன் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து தீர்த்தங்களை அமைத்து வழிபட்டிருக்கிறார்.

* தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பரிதி நியமம். இத்தல ஈசன் பாஸ்கரேஸ்வரர் என்றும் பருத்தியப்பர் என்றும் வணங்கப்படுகிறார். இந்த பெயர்களுக்குக் காரணம், சூரியன் இவரை வழிபட்டதே.

* கும்பகோணம், கஞ்சனூரை அடுத்துள்ளது சூரியமூலை. கோடி சூரியர்கள் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதால் இத்தல ஈசன் ருத்ரகோடீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

தொகுப்பு: பரிமளா

The post சூரியன் வணங்கிய தலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: