பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் திறப்பு: அமைச்சர், எம்எல்ஏ, போலீஸ் கமிஷனர் பங்கேற்பு

தாம்பரம்: பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் மேம்பாலம் திறக்கப்பட்ட பின்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து பம்மல் – அனகாபுத்தூர் பகுதிகளுக்கு செல்லும் இடத்தில் இருந்த சந்திப்பு மூடப்பட்டது. இதனால் தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை வழியாக ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள் பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் வழியாக சென்று இடது புறம் திரும்பி பம்மல் – அனகாபுத்தூர் செல்லும் சாலையிலும், சென்னையில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக வரும் வாகனங்கள் பம்மல் – அனகாபுத்தூர் சாலைக்கு செல்ல பாண்ட்ஸ் சிக்னல் வரை சென்று பின்னர் அங்கிருந்து யூ டர்ன் செய்து பின்னர் மீண்டும் பல்லாவரம் நோக்கி சென்று மேம்பாலத்தின் கீழ்பகுதியில் இடதுபுறம் பம்மல் – அனகாபுத்தூர் சாலை வழியாக செல்லும் நிலை இருந்தது.

மேலும் பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல சிக்னல் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் அப்பகுதியில் யூ டர்ன் வசதியுடன் சிக்னல் அமைத்து தர வேண்டும், மேலும் அப்பகுதியில் சாலையை நடந்து கடந்து செல்ல பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சென்னையில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பம்மல் – அனகாபுத்தூர் பகுதிக்கு வாகனங்கள் செல்லும் விதமாக சிக்னல் அமைக்கப்பட்டு, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, சிக்னலை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, தாம்பரம் மாநகர காவல் இணை ஆணையர் மூர்த்தி, துணை ஆணையர் பவன் குமார், போக்குவரத்து துணை ஆணையர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் திறப்பு: அமைச்சர், எம்எல்ஏ, போலீஸ் கமிஷனர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: