×

நீரில் கரைக்க எடுத்துச் சென்றபோது விநாயகர் சிலையில் தங்க சங்கிலி கண்டெடுப்பு: இளைஞர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர், எஸ்.பி. பாராட்டு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 9வது ஆண்டாக விநாயகர் சிலையை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3 நாட்கள் கழித்து விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்க நேற்று எடுத்துச் சென்றனர். நீரில் கரைக்க விநாயகரை எடுத்துச் சென்ற நிலையில் வேதாசலம் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளிலும் வழிபாடு செய்த மண் விநாயகர் சிலைகளையும் நீர்நிலையில் கரைக்க இளைஞர்கள் கொண்டு சென்ற வாகனத்திலேயே வைத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை மேளதாளத்தோடு எடுத்துச் சென்று இளைஞர்கள் கரைத்தபோது, ஒரு விநாயகர் சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர். கண்டெடுத்த தங்கச் சங்கிலி உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வேதாச்சலம் நகர் பகுதியில் வீடு வீடாகசென்று விசாரித்தனர். விசாரணையில் வேதாச்சலம் நகரை சேர்ந்த குமரவேல் – செல்வி தம்பதியினர் தாங்கள் வாங்கி வந்த மண்ணாலான விநாயகர் சிலைக்கு தங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என தங்கச் சங்கிலியை அணிவித்து அலங்காரம் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

பின்ன, தங்கச் சங்கலியை கழட்டி எடுத்துக் கொள்ளாமல் கவனக்குறைவாக நீர்நிலையில் கரைக்க தங்க சங்கிலியோடு விநாயகரை வைத்துவிட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் முன்னிலையில் தங்கச் சங்கிலியை கவனக்குறைவாக தவறவிட்ட குடும்பத்தினரிடம் வேதாசலம் பகுதி இளைஞர்கள் நாணயமாக ஒப்படைத்தனர். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை பவுன் தங்க சங்கிலியை நாணயமாக ஓப்படைத்த இளைஞர்களை மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் நன்றி தெரிவித்து பாராட்டு பரிசு வழங்கி கௌரவித்தார். கவனக்குறைவால் தவறவிட்ட தங்கச் சங்கிலியை நேர்மையாக உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களின் செயலை வேதாசலம் நகர் பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

The post நீரில் கரைக்க எடுத்துச் சென்றபோது விநாயகர் சிலையில் தங்க சங்கிலி கண்டெடுப்பு: இளைஞர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர், எஸ்.பி. பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kanchipuram ,Vedachalam Nagar ,Kanchipuram Corporation ,Vinayagar Chaturthi festival 9th… ,S.P. Appreciation ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...