மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் அடுத்த 32வது வார்டுக்கு உட்பட்ட புத்தகரம், சூரப்பட்டு, மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சிறுவர் விளையாட்டு பூங்கா பல ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்டது. தற்போது, பூங்கா பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாத அளவுக்கு உள்ளது. சூரப்பட்டு, புத்தகரம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு நகர் பகுதிகளைச் சார்ந்த சிறுவர்கள் விளையாடுவதற்கு போதுமான இடமில்லாததால் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள பூங்காவை மாதவரம் மண்டல அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து புதுப்பித்து சிறுவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்களை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்காவை சில சமூக விரோதிகள் இலவச பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அருகிலுள்ள சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நடைபயிற்சிக்கு செல்ல இடமில்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பைபாஸ் சாலையில் சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பூங்காவை உரிய முறையில் பராமரித்து சுற்றுச்சுவர் மற்றும் மின்விளக்குகள் அமைத்து நடைபயிற்சி செல்ல வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

The post மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: