தச்சூர் கூட்டு சாலையில் பரபரப்பு லோடு வேனில் ரூ.3 லட்சம் அபேஸ்: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு வலை

கும்மிடிப்பூண்டி: தச்சூர் கூட்டு சாலையில் லோடு வேனில், கைபையில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் திருடி சென்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் இயங்கி வரும் மொத்த விற்பனை மளிகை கடையிலிருந்து நேற்றுமுன்தினம் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லோடு வேனில் கடை ஊழியர்களான டிரைவர் மாடசாமி(30), லோடுமேன் சதன்பாண்டியன்(24) ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் நேற்று மாலை கவரைப்பேட்டை அருகே தச்சூர், போரக்ஸ் நகரில் லோடு வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு, அங்குள்ள மளிகைக் கடையில் பொருட்களுக்கான பணத்தை வசூலிக்க சென்றனர்.

திரும்பி வந்து பார்த்தபோது, இவர்கள் ஏற்கெனவே வசூலித்து டிரைவர் இருக்கையின் பின்னால் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மாயமாகி போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் வண்டி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து, கவரப்பேட்டை போலீசாரிம் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், கும்மிடிப்பூண்டியில் இருந்தே, லோடு வேனை இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் திட்டமிட்டு பின் தொடர்ந்து செல்வதும், பணப்பையை திருடிச்சென்றதும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியின் மூலம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதில், ரூ.3 லட்சத்துடன் பைக்கில் தலைமறைவான 2 மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post தச்சூர் கூட்டு சாலையில் பரபரப்பு லோடு வேனில் ரூ.3 லட்சம் அபேஸ்: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: