பரனூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வனக்காடுகள் உள்ளன. இங்கு மான், முயல், காட்டெருமை, நரி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவை அனைத்தும் உணவு மற்றும் தண்ணீர் தேடி, செங்கல்பட்டு பகுதி குடியிருப்புகளுக்கு வந்து செல்கின்றன. மேலும், ஜிஎஸ்டி நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் தின்பதால், அவற்றுக்கு உடல்நலன் பாதித்து உயிரிழக்கின்றன.

மேலும், பரனூர் அருகே வனப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை இருந்தும், கடந்த சில மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் மூலம் இரவு நேரங்களில் தனியார் வாகனங்கள் மூலம் பிளாஸ்டிக் கவர்களில் கட்டப்பட்டு குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், அவற்றை தவறுதலாக உண்ணும் மான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.

இவற்றை தடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் பரனூர் அருகே வனப்பகுதியில் சாலையோரங்களில் பிளாஸ்டிக் கவர்களில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் வனத்துறை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு, இதுபோன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பரனூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: