திருவண்ணாமலை, செப்.21: தண்டராம்பட்டு அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ருத்ரகுமார்(26), கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கடந்த 20.4.2018 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ருத்ரகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலையில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு ேகார்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில், அரசு தரப்பில் சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் ருத்ரகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹3 அபராதமும் விதித்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் ருத்ரகுமாரை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த appeared first on Dinakaran.