ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்: அமைச்சர்களிடம் சங்க தலைவர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து, ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கை குறித்து விரிவாக கலந்துரை யாடினார். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவது, அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியமாக வழங்கவேண்டும். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்கள் 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலத்துடன் சேர்க்கப்படவில்லை. சேர்க்காமல் விடுபட்ட காலத்தையும் பணிக்காலத்துடன் இணைத்து உரிய பணி பலன் வழங்கவேண்டும். மருத்துவர்களுக்கு இருப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்றித்தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சந்திப்பின்போது, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் தி.அருள்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்: அமைச்சர்களிடம் சங்க தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: