திருச்சி மலைக்கோட்டையில் சதுர்த்தி விழா உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், 273 அடி உயரமும், 417 படிகளும் கொண்டது. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் அமைந்துள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் 50 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 30 கிலோ நெய், ஏலக்காய், ஜாதிக்காய், எள், தேங்காய்ப்பூ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஆவியில் வேக வைத்து தயார் செய்யப்படும் கொழுக்கட்டை படையலிடப்படும். அதேபோல் இந்தாண்டும் 150 கிலோ மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. நேற்று காலை விநாயகர் சதுர்த்தி விழா கணபதி பூஜை, கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 9.10 மணிக்கு கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் கொழுக்கட்டையை தொட்டில் போல் கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிச் சென்று உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ என acபடையலிட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலை உச்சியில் உள்ள படிக்கட்டுகளில் பல்வேறு வகையான கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும் மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் வரும் 1ம் தேதி வரை பல்வேறு வகையான அலங்காரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நரிக்குறவ இனத்தை சேர்ந்த ஒரு ஆண், பெண் வேடமிட்டு தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். இதுபோல ஏராளமான பக்தர்கள் பல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post திருச்சி மலைக்கோட்டையில் சதுர்த்தி விழா உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் appeared first on Dinakaran.

Related Stories: