×

வில்லியனூரில் பதற்றம் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் முற்றுகை-பரபரப்பு வாலிபரை அடித்து இழுத்து சென்ற போலீசார்

வில்லியனூர், செப். 16: வில்லியனூரில் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வில்லியனூரில் இருந்து பத்துக்கண்ணு செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே பட்டாணிக்கலம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 13ம் தேதி இரவு அந்தப் பகுதியில் மதுபான கடைக்குள் மதுபாட்டில்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வில்லியனூர் பத்துக்கண்ணு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிறகு வில்லியனூர் தாசில்தார் சேகர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார். இந்நிலையில் நேற்று காலை வில்லியனூர் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுபான கடை திறக்கப்பட்டது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடைக்கு எதிராக மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் மதுக்கடையை மூடிவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வில்லியனூர் போலீசார், அடித்து இழுத்து போலீஸ் வேனில் ஏற்றிய போது போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வேனில் ஏற்றப்பட்டவரின் மனைவி மற்றும் மகள்கள் அழுதுகொண்டே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் தரத்தரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த சிவா எம்எல்ஏ, பொதுமக்களிடம் பேச்சு வார்த்ைத நடத்தினார். அப்போது இப்பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு நான் விடமாட்டேன் என உறுதி அளித்தார். வாலிபரையும் போலீசார் விடுவித்தனர். போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள், கலைந்து சென்றனர்.

‘‘என் அப்பாவை விடுங்கள்’’கத்தி கதறிய மாணவிமதுக்கடை திறப்புக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது வாலிபர் ஒருவரை போலீசார் தாக்கி இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அவரது மகள் திடீரென வந்து போலீசாரிடம் என் அப்பாவை விடுங்கள் என்று கத்தி கதறினார். ஆனால் பெண் போலீசார் அந்த மாணவியின கையைப்பிடித்து இழுத்து தள்ளினர். மீண்டும் அந்த மாணவி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். உடனே போலீசார் அந்த மாணவியை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post வில்லியனூரில் பதற்றம் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் முற்றுகை-பரபரப்பு வாலிபரை அடித்து இழுத்து சென்ற போலீசார் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Villianur ,
× RELATED வில்லியனூர் அருகே பரபரப்பு...