×

கோயில் நில மோசடியில் காவலில் 2 அதிகாரிகளிடம் விசாரணை பாஜ எம்எல்ஏ மீது வழக்கு பாயுமா? ஆவணம் திரட்டும் சிறப்பு புலனாய்வு குழு

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி கோயில் நில மோசடி தொடர்பாக 2 அதிகாரிகளை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் துருவிதுருவி விசாரணை நடத்துவதால் பாஜ எம்எல்ஏ மீது வழக்கு பாயுமா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. புதுச்சேரி, காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் போலி ஆவணம் தயாரித்து விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் அரசு அதிகாரிகளான நிலஅளவை பதிவேடு துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் செட்டில்மென்ட் அதிகாரியான பாலாஜி ஆகியோர் மீதும் சிபிசிஐடி வழக்குபதிந்து தேடிய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் 2 நாள் காவல் விசாரணைக்கு நீதிபதி மோகன் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அரசு அதிகாரிகளான ரமேஷ், பாலாஜி இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காவலில் எடுத்த போலீசார், அவர்களை கிருமாம்பாக்கம் டிராபிக் (தெற்கு) காவல் நிலையம் கொண்டு சென்று விடிய விடிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி நகர பகுதியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு இருவரையும் அழைத்துச் செல்லாமல் கிராமப்புற பகுதியான கிருமாம்பாக்கத்திற்கு கொண்டு சென்ற சிறப்பு புலனாய்வு குழு ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.

காமாட்சியம்மன் கோயில் நிலத்தை முறைப்படி பதிவு செய்தீர்களா, ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்பட்டதா, அவற்றில் கையொப்பம் இட்டுள்ளது தாங்கள் தானா?, இந்த சொத்துக்களை பதிவு செய்தபோது யார், யார் வந்திருந்தனர் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை சிறப்பு புலனாய்வு குழு எழுப்பி பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறது. இதில் சில துப்புகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன்பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல் விசாரணையை முடித்து இன்று காலை இருவரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த 2 அதிகாரிகளும் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அடுத்தகட்டமாக இவ்வழக்கில் சர்ச்சையில் உள்ள பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பாயுமா? என்பது தெரியவரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

The post கோயில் நில மோசடியில் காவலில் 2 அதிகாரிகளிடம் விசாரணை பாஜ எம்எல்ஏ மீது வழக்கு பாயுமா? ஆவணம் திரட்டும் சிறப்பு புலனாய்வு குழு appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Special Investigation Team ,Puducherry ,Dinakaran ,
× RELATED சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக...