செங்கல்பட்டு முதல் திருவள்ளூர் வரை இயக்கப்படும் பேருந்து (தடம் எண் 82 சி) போளிவாக்கம் சத்திரம் பகுதி நிறுத்தத்தில், நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவர்கள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரும் அவதிப்பட்டனர். இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு, திருவள்ளூர் பேருந்து பணிமனையிலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். இதனால், பேருந்தை நிறுத்திச்செல்லும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், பேருந்தை சம்பந்தப்பட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் ஓட்டுனர் இயக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் முதல் செங்கல்பட்டு வரை ெசல்லும் பேருந்தில் மாணவர்கள் ஏறியுள்ளனர். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் இயக்கி உள்ளார். உடனே, மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, அங்கு வந்த பேருந்தை பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து ஓட்டுனருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக, திருவள்ளூர் முதல் பெரும்புதூர் வரை செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ, கார், வேன், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பணி முடித்து வீட்டுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து, அங்கு வந்த மணவாள நகர் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் ேபசி பேருந்து நிறுத்தத்தில் நிற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரம்; பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.
