மகளிர் உரிமை தொகை தொடக்க விழாவிற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: கட்சியினருக்கு அமைச்சர், எம்எல்ஏ அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்று பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்குமொழி பேச்சாற்றலாலும் – எழுத்தாற்றலாலும் – அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் – நம்மை எல்லாம் ஆளாக்கிய “காஞ்சி தந்த காவிய தலைவன், உலகம் போற்றும் உத்தம தலைவர், பேரறிஞர் அண்ணா. அவர் பிறந்த காஞ்சிபுரம் மாநகரில் அவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி காலை 10 மணியளவில், 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் அற்புத திட்டமான கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

இக்கோலகலமான விழா நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் கடந்த 10 நாட்களாக பிரம்மாண்டமான மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இம்மாபெரும் பந்தலில் பயனாளிகள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமர்வதற்காக தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சரித்திர சிறப்புகளை பெறப்போகும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, செப்டம்பர் 15ம்தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த உளுந்தையிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வருகிறார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்பெரும்புதூர் மணிகூண்டு அருகில் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பேண்டு வாத்தியம், மேளதாளம், அதிர் வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தினர் அனைவரும் திரளாக திரண்டு நின்று, எழுச்சி மிகு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பிள்ளைசத்திரம் அருகில் செண்டை மேளம், பேண்டு வாத்தியம், அதிர் வேட்டுகள் முழங்க திமுகவினரும், பொதுமக்களும் எழுச்சியுடன் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அடுத்து, வாலாஜாபாத் வடக்கு – தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம் ஆகியவற்றின் சார்பில் வழியெங்கும் பொதுமக்களும், திமுகவினரும் பெருந்திரளாக கூடி நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். மொத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகரிலிருந்து இவ்விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கிமீ தூரத்திற்கு வழி நெடுகிலும் திமுகத்தினரும், பொதுமக்களும் எழுச்சியுடன் பெரும் கூட்டமாக கூடி ஆர்ப்பரித்து நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து – காஞ்சிபுரம் வரை வழியெங்கும் முதல்வர் – தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று சாலையின் இருமருங்கிலும் திமுக கொடி, தோரணங்களும், வரவேற்பு பதாகைகளும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அமைத்து, காஞ்சிபுரம் மாநகரில் இதுவரை, இதுபோன்ற கோலாகலமாக வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்றது இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் திமுகவினர் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில், வாதாபி நகரை வென்று, வெற்றியுடன் காஞ்சிபுரம் மாநகருக்கு திரும்பிய நரசிம்ம பல்லவ மாமன்னன் பெற்ற நல்லதொரு வரவேற்பையும் மிஞ்சிடும் வகையில், தமிழர் நல்வாழ்வே, தம் வாழ்வு என்று அல்லும் பகலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து வரும் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், திராவிட மாடல் முதல்வர், நம்முடைய உயிரினும் மேலான அன்புத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த திமுக தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் – திமுகவின் இலட்சிய இரு வண்ணக்கொடியை ஏந்தி, காஞ்சிபுரம் மாநகரமே இதுவரை கண்டிராத வகையில் கழகத்தினரும், பொதுமக்களும் பல்லாயிரகணக்கில் வழிநெடுகிலும் திரண்டு நின்று, காஞ்சிபுரம் மாநகர வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க கூடிய அளவிற்கு, இதுவரை இப்படியொரு வரவேற்பு எப்பொழுதும் அளித்தது இல்லை என்று வரலாற்று சரித்திர சாதனை படைக்கும் அளவிற்கு, வழியெங்கும் அலை கடலென அணி திரண்டு நின்று கோலகலமான வரவேற்பை அளித்து சரித்திரம் படைப்போம் வாரீர் என என்று அன்புடன் அழைக்கிறோம்.

அத்துடன் வரலாற்றில் இடம் பெறப்போகும் மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழாவில், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற அண்ணாவின் வைர வரிகளுக்கு ஒப்பாக, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்டம் முழுவதிலிருந்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கில் திறந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மைதானத்தில் காலை 8 மணிக்கு அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மகளிர் உரிமை தொகை தொடக்க விழாவிற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: கட்சியினருக்கு அமைச்சர், எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: