கிண்ணக்கொரையில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்

மஞ்சூர் : பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி எல்லையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கிண்ணக்கொரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. சுமார் 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விவசாயிகள் இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர தோட்டத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளனர்.

இந்நிலையில் தேயிலை விவசாயத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் 11 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ள கிண்ணக்கொரையில் தேயிலை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஊர் தலைவர் நஞ்சூண்டகவுடர் தலைமை தாங்கினார். இதில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளை நடைமுறை படுத்த வேண்டும், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.33.50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் கிண்ணக்கொரை, இரியசீகை, பிக்கட்டி, அப்பட்டி, இந்திராநகர், காமராஜ்நகர், ஜே.ஜே.நகர், தணயகண்டி, மேலுார், ஒசாட்டி சுற்று கிராமங்களை சேர்ந்த தேயிலை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கிண்ணக்கொரையில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: