கூடங்குளம் கடலில் கரை தட்டிய மிதவை கப்பல் மீட்பு பணி தீவிரம்: அதிக விசை இழுவை கப்பல் வரவழைப்பு

கூடங்குளம்: கூடங்குளம் கடலில் தரை தட்டிய மிதவை கப்பல் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5வது மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமான பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக தலா 300 டன் எடை கொண்ட 2 நீராவி ஜெனரேட்டர்கள் எடுத்து வரப்பட்டன. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் வந்த போது, மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால், இரும்பு இழுவை கயிறு அறுந்து விட்டது.

கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதி அருகில் உள்ள பாறையில் சிக்கி தரை தட்டி நின்றது. இதை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த வல்லுனர் குழுவினர் மூன்று பரிந்துரைகளை செய்தனர். இதையடுத்து மும்பை தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மிதவை கப்பலில் ஏற்பட்ட 3 ஓட்டைகளை நீர்மூழ்கி வீரர்கள் மூலம் வெல்டிங் செய்து அடைத்து, அதில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, சாய்ந்த நிலையில் இருந்த மிதவை கப்பலை சமன் செய்தனர். ஆனாலும் இழுவை கப்பலை மீட்க முடியவில்லை. இன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அதிக விசை கொண்ட இழுவை கப்பல் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடரும் என கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கூடங்குளம் கடலில் கரை தட்டிய மிதவை கப்பல் மீட்பு பணி தீவிரம்: அதிக விசை இழுவை கப்பல் வரவழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: