இந்தியாவின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் வழியை மோடி பின்பற்றுகிறார்: ஜார்கண்ட் ஆளுநர் கருத்து

மதுரை: இந்தியாவின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் வழியை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து நேற்று மதுரை வந்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் வழியை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என நினைக்கிறேன். சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால் மோடியின் முடிவும் சரியே. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் நடக்கிறது. முதலில் தமிழக அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது போல், ஆளுநருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் மரபுதான். சனாதனம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. அது இந்து மதத்தின் ஒரு அங்கம். இந்து மதத்தில் காலத்தின் அடிப்படையில் தோன்றிய ஜாதிகள் பல்வேறு சமூக வெறுப்புகளை உருவாக்கியது என்பதை மறுக்க இயலாது. அதனை இந்து மதம் போதிக்கவில்லை. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்றே மதம் கூறுகிறது. ராமாயணம், மகாபாரதத்தை எழுதியது உயர்ஜாதியினர் அல்ல.

சாதாரணமானவர்கள் தான். ஜாதியினால் ஏற்றத்தாழ்வு என்பது இல்லை. குலத்தினால் மட்டுமே அது உருவாகிறது என இதிகாசங்கள் கூறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிருபர்கள், ஜி20 மாநாடு குறித்த ராகுல்காந்தியின் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, ‘‘அவருக்கு பதில் சொல்வது ஆளுநரின் வேலை அல்ல. அதனை செய்தால் ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்பார்கள்’’ என்றார்.

The post இந்தியாவின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் வழியை மோடி பின்பற்றுகிறார்: ஜார்கண்ட் ஆளுநர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: