பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்


ஊட்டி: இரண்டாவது சீசன் துவங்கி உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள சிறிய மற்றும் பெரிய புல் மைதானங்கள் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. முதல் சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுதவிர வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே சமயம் இரண்டாவது சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது இச்சமயங்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அதிகளவு வருவார்கள்.

குறிப்பாக வட மாநில தேனிலவு தம்பதிகள் அதிகளவு வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இரண்டாம் சீசனின் போது முதல் சீசன் போன்று மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி போன்ற விழாக்கள் ஏதும் நடத்தவில்லை என்ற போதிலும் தாவரவியல் பூங்காவில் வழக்கம்போல் பூங்கா முழுவதும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12000 தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்கள் பூத்துள்ளன. இவை ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் அடுக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மகிழ்ந்து விளையாடி செல்ல ஏற்றவாறு பூங்காவை தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானம் மற்றும் பெரிய புல் மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. நாள்தோறும் பூங்கா ஊழியர்கள் பூங்காவில் தண்ணீரை பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டு புல் மைதானங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: