பாளையங்கோட்டையில் 3 நாட்கள் முப்பெரும் விழா கோலாகல ஏற்பாடு; புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலயம் நாளை மறுநாள் திறப்பு: ஆயர் அந்தோணிசாமி தகவல்


நெல்லை: பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு மற்றும் அர்ச்சிப்பு விழா, பாளை மறை மாவட்ட பங்கு தலங்களில் பொன் விழா நன்றி திருப்பலி, பொன் விழா நிறைவு கொண்டாட்டம் என முப்பெரும் விழா, பாளையங்கோட்டையில் 8,9,10 ஆகிய 3 நாட்கள் நடக்கின்றன. இதுகுறித்து பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சவரிமுத்து நெல்லையில் இன்று அளித்த பேட்டி: பாளையங்கோட்டை மறை மாவட்டம், 1973ம் ஆண்டு உருவானது. அப்போது முதல் ஆயராக இருதயராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டார். 1998ல் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி 1999ல் அவர் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து 2000ம் ஆண்டு டிச.8ம்தேதி 2வது ஆயராக நியமிக்கப்பட்ட ஜூடு பால்ராஜ் பணியை தொடங்கினார். 2018ம் ஆண்டு அவர் பணி நிறைவு பெற்றததை் தொடர்ந்து, மூன்றாவது ஆயராக 2019ம் ஆண்டு நான் அறிவிக்கப்பட்டேன்.

22 பங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்த மறை மாவட்டம், தற்போது 57 பங்குகளான வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அடிப்படை கல்வி என்பதை கருத்தில் கொண்டு கல்வி சாலைகள் தொடங்கப்பட்டு, அறிவொளி ஏற்படுத்தியுள்ளோம். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சமூக சேவை சங்கம் தொடங்கப்பட்டு பல செயல்பாடுகளை ஏற்படுத்தி முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், கதீட்ரல் ஆலயமாக செயல்பட்டு வருகிறது. 1644ம் ஆண்டு சிறிய ஆலயமாக தொடங்கப்பட்ட இந்த ஆலயம், 1860ம் ஆண்டிலும், 1957ம் ஆண்டிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது ரூ.16 கோடி மதிப்பில் கலை நயத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 800 முதல் 900 பேர் அமர முடியும். மேலே அமைக்கப்பட்டுள்ள கேலரியில் 200 பேர் அமரலாம்.

இந்த புதுப்பிக்கப்பட்ட பேராலய திறப்பு மற்றும் அர்ச்சிப்பு விழா வருகிற 8ம்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி முன்னிலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ், புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலயத்தை திறந்து வைக்கிறார். பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயராகிய நான், அர்ச்சிப்பு செய்கிறேன். இதைத் தொடர்ந்து 9ம்தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குத் தலங்களில் பொன் விழா நன்றி திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 10ம்தேதி மாலை 4.30 மணிக்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இவ் விழாவிற்கு திருத்தந்தையின் இந்திய நேபாள தூதுவர் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை வகிக்கிறார்.

ஹைதராபாத் உயர் மறை மாவட்ட கர்தினால் அந்தோணி பூலா, பாண்டி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலியும், சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கத்தின் மறையுரையும் நடக்கிறது. விழாவில் தமிழக ஆயர்கள், குருக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி, தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ், அய்யாவழி பால பிரஜாபதி அடிகள், தமிழ்நாடு ஜமாத் உலமா சபைத் தலைவர் காஜா முகைதீன் கஸரத் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதா கிருஷ்ணன், எம்.பிக்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா, ராஜா, சதன் திருமலைக்குமார், கிருஷ்ணமுரளி, ரூபி மனோகரன், பழனிநாடார், மனோஜ்பாண்டியன், கடம்பூர் ராஜூ, சண்முகையா, மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசுகின்றனர். இவ்வாறு ஆயர் அந்தோணிசாமி தெரிவித்தார். பேட்டியின் போது பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகள், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய பங்குத் தந்தை அந்தோணி குரூஸ் அடிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

காமநாயக்கன்பட்டி திரு பேராலயமாக உயர்வு
காமநாயக்கன்பட்டியில் உள்ள பரலோக மாதா திருத்தலம் திரு பேராலயமாக கடந்த ஆக.15ம்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ரோமிலிருந்து வந்துள்ளது என ஆயர் அந்தோணிசாமி பேட்டியின் போது தெரிவித்தார்.

3 மாவட்டங்கள்
பாளையங்கோட்டை மறை மாவட்டம், நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி தாலுகா மற்றும் சில பகுதிகள் என 3 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 57 பங்குகள் உள்ளன.

The post பாளையங்கோட்டையில் 3 நாட்கள் முப்பெரும் விழா கோலாகல ஏற்பாடு; புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலயம் நாளை மறுநாள் திறப்பு: ஆயர் அந்தோணிசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: