கலைஞர் நூற்றாண்டையொட்டி சோமர்செட் மாவட்ட பிராங்க்ளின் நகரிய துணை மேயர் வாழ்த்து பிரகடனம்: தமிழக முதல்வர் வழங்கினார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் எழுத்தாளர் இமையம், ஏ.ஜி.பாலமுருகன், பாண்டிமதி துரைராஜ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, கலைஞர் நூற்றாண்டையொட்டி அமெரிக்க நாட்டின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிராங்க்ளின் நகரியத்தின் வாழ்த்து பிரகடனத்தை அளித்தனர். அந்த பிரகடனத்தில், ‘‘இந்தியாவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கலைஞர், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்தவர். அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், சினிமா ஆகிய துறைகளில் கலைஞர் ஆற்றிய அளப்பரிய பணிகளுக்காக கவுரவிக்கப்படுகிறார்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் தனது சமூகநீதி கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சிறந்த முறையில் நிர்வாகம் செய்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டிற்கு அயராது உழைத்தவர் அவர். கலைஞர், தனது நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான வாழ்நாளில் அறிவு, அனுபவம், ஞானம் மற்றும் சமூகத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக, அனைத்து தரப்பு மக்களின், அனைத்து வயதினரின் மரியாதையையும், அன்பையும் பெற்றிருந்தார். எனவே, அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் சோமர்செட் மாவட்டத்தில் உள்ள பிராங்க்ளின் நகரியத்தின் துணை மேயராக உள்ள ராம் அன்பரசன் என்கிற நான், டவுன்ஷிப் கவுன்சில் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் சார்பாக, கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வாழ்த்து பிரகடனத்தை வழங்குவதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டையொட்டி சோமர்செட் மாவட்ட பிராங்க்ளின் நகரிய துணை மேயர் வாழ்த்து பிரகடனம்: தமிழக முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: