ஒன்றிய அரசின் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

காஞ்சிபுரம்: நடைமுறையில் இருக்கும் 3 சட்டங்களை மாற்றியமைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில், வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய 3 சட்டங்களின் சரத்துகளை முழுமையாக மாற்றியமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் சட்ட முன்முடிவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, இந்த சட்ட முன்முடிவு கொடுங்கோல் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை கண்டித்து, உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 கொடுங்கோல் சட்ட முன்முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரம் போராட்டம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு உண்ணாவிரம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரம் பார் அசோசியேஷன், காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன், லாயர்ஸ் அசோசியேஷன், உத்திரமேரூர் மற்றும் பெரும்புதூர் பார் அசோசியேஷன் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி, நடைமுறையில் இருக்கும் 3 சட்டங்களை மாற்றியமைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டில் நேற்று மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு வழங்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்க தலைவர் சோமசுந்தரம் கலந்துக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் வந்து கலந்துக்கொண்டனர்.

The post ஒன்றிய அரசின் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: