4 இருளர் பெண்களை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு பேராசிரியர் கல்யாணி மீது தொடர்ந்த எஸ்.சி, எஸ்.டி., வழக்கு விசாரணை ரத்து: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: இருளர் வகுப்பை சேர்ந்த இளம் பெண்களை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த பெண்களை காப்பாற்றிய பேராசிரியர் மீது தொடரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. திருக்கோவிலூரைச் சேர்ந்த 4 இருளர் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்களை கடந்த 2011ல், திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய சம்பவத்தில், நீதிமன்றத்தில் ஆஜராகிய அப்பெண்களை தங்கமணி என்பவர் கடத்திச் செல்ல முயன்றதாக கூறப்பட்டது. அந்த பெண்களை பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளரான திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்வி மணி என்ற கல்யாணி (75) மற்றும் விழுப்புரம் பி.வி.ரமேஷ் (53) ஆகியோர் பாதுகாக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் பேராசிரியர் கல்யாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால், தங்கமணிக்கு எதிராக பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் போலீசார் மீதான பாலியல் குற்றச்சாட்டை திசை திருப்பும் நோக்கில் தங்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி பேராசிரியர் கல்யாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜயேந்திரன் ஆஜராகி, பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். எங்கள் தரப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் கல்யாணி மற்றும் விழுப்புரம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் முகாந்திரம் இல்லை. எனவே, விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post 4 இருளர் பெண்களை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு பேராசிரியர் கல்யாணி மீது தொடர்ந்த எஸ்.சி, எஸ்.டி., வழக்கு விசாரணை ரத்து: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: