மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் விரைவில் இடிப்பு: ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னை: ‘‘மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளது’’ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பணிமனை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மயிலாப்பூர் லஸ் சந்திப்பு சாலையின் கீழ், மெட்ரோ ரயில்களை இயக்கும் வகையில் இரட்டை சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது. இதற்காக பறக்கும் ரயில்நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாய் மீது கட்டிய பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.

இங்கு, மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்பாதை மாதவரம் பால்பண்ணை-சிறுசேரிசிப்காட் மற்றும் கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமையும். இது, பறக்கும் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தையும் இணைக்க உள்ளது. பக்கிங்காம் கால்வாய் இடிக்கப்படும்போது பஸ் மற்றும் வாகன ேபாக்குவரத்து மயிலாப்பூர்-லஸ் சாலை மார்க்கம் மூடப்படும்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது: மயிலாப்பூர் மெட்ரோ ரயில் சுங்கப்பாதை பணிக்காக பங்கிங்காம் கால்வாயில் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயின் மேல் கட்டிய பாலம் இடிக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை ரயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் பாலத்தின் தூண்கள் வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையிடம் உரிய அனுமதி கேட்டு உள்ளோம். இந்த சுரங்கப்பாதை ரயில் நிலையம் 35 அடி ஆழத்தில் இருக்கும். இப்பகுதியில் கடினமான பாறைகள் உள்ளதால் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருக்கும்.

மயிலாப்பூர் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக தடுப்புகள் அமைப்பது இந்த மாத இறுதியில் தொடங்கும். முதல் கட்டமாக மின்சார கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற நிலத்தடியில் உள்ளவற்றை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லும் பணி செப்டம்பர் மாதம் நடைபெறும். இதன்பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர்கள் கட்டும் பணி நவம்பர் மாதம் தொடங்கும். சுரங்கப்பாதை தோண்டும்பணி அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என்றார்.

The post மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் விரைவில் இடிப்பு: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: