வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா துவக்கம்: கொடியேற்று விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கீழ்திசைநாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் மாலை 5.45 மணிக்கு கொடியை புனிதம் செய்து வைத்தனர். இதைத் தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேராலய முகப்பில் இருந்து அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடி ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது.

இதில் பல்வேறு மாவட்டம், பல்வேறு மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணியில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியா!, மரியே வாழ்க! என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. அப்போது ஆண்டுபெருவிழா கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கண்களை கவரும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. சிறிது நேரத்தில் பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தைகள் டேவிட்தனராஜ், ஆரோக்கிய வினிட்டோ, ஆண்டோ ஜேசுராஜ், மார்டின் சூசைராஜ், லூர்துசேவியர் மற்றும் திருத்தல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி கடைவீதி சாலை, கடற்கரை சாலை, நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகள் மட்டுமே தெரிந்தது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா துவக்கம்: கொடியேற்று விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: