திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு: அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2023 – 24ம் ஆண்டுக்கான பொது கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி, மேல்மா நகர் அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, மாணவர் மாணவிகளோடு கலந்துரையாடினர்.

பின்னர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களோடு கலந்துரையாடினர். இதனையடுத்து கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரடியாக பார்வையிட்டனர். நெடுஞ்சாலைத்துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூர் முதல் மணவாளநகர் வரை நடைபெற்று வரும் இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்ததாவது: சட்டப்பேரவை பொது கணக்கு குழு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டது.

மத்திய கணக்காயர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடைபெறுகிறது. குறிப்பாக இன்று (நேற்று) பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மையமும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இன்றைய ஆய்வுகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதோ, குறிப்பாக மருத்துவ துறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இன்னும் அட்வான்ஸ் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி அந்த தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். கழிவு நீரை அகற்றுவதற்கு தமிழக அரசு முறைப்படுத்தி உள்ளது. அதனை, விரைவில் செயல்படுத்த இந்த குழு வலியுறுத்தும்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேல்நல்லாத்தூரில் ஆய்வு செய்யப்பட்டபோது அதில் மாநில அரசின் சார்பாக ரூ.1,72,800-ம், ஒன்றிய அரசால் ரூ.1,04,490-ம் என மொத்தம் ரூ.2,77,290 என ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கு அதிகமாக உள்ளது. அதை பொதுமக்களிடையே விளம்பரப்படுத்த வேண்டும்.‌ புங்கத்தூர் அரசு ஆதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த போது, அங்கு மழைநீர் விளையாட்டுத் திடலை சூழ்ந்துள்ளது.‌ அங்கு தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த குழு அறிவுறுத்துகிறது.

அந்தப் பள்ளியில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் இருட்டில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் படிப்பதற்கு எந்தவித தடையும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புங்கத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உரிய முறையில் ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் காலை முதல் ஆய்வுகள் மேற்கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ள உரிய ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் இந்த சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தெரிவித்துக் கொள்கிறது. அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், குழு உறுப்பினர்களும், எம்எல்ஏக்களுமான சட்டமன்ற உறுப்பினர்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, சங்கராபுரம் தா.உதயசூரியன், திருச்செங்கோடு ஈ.ஆர் ஈஸ்வரன், போளூர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, பரமத்தி வேலூர்எ ஸ்.சேகர், மொடக்குறிச்சி சி.சரஸ்வதி, சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் தராஜ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா,செயற்பொறியாளர் வ.ராஜவேல், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன்,உதவி கோட்ட பொறியாளர் தஸ்னவிஸ் பெர்ணான்டோ மாநில வணிகவரி இணை ஆணையர் சுசில்குமார், மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், திருவள்ளூர் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பவுலின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவகர்லால், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரூபேஸ் குமார்,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* மோடி அரசு கூண்டில் ஏறக்கூடிய காலம் நெருங்கிவிட்டது
செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை மேலும் கூறியதாவது; அண்ணா பல்கலைகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆராய்ந்து உண்மையை கண்டறியும். ஒன்றிய மோடி அரசின் துறைகளில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்திருக்கிறது. மோடி ஆட்சியில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது என்பதை சிஏஜி கூறியுள்ளது. பிரதமர் அலுவலகம் பக்கத்திலேயே உள்ள சிஏஜி அலுவலகம் இந்த முறைகேடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 9 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக பட்டவர்த்தமாக தோல் உரித்து காட்டியுள்ளது. இனியும் பொய் பேச முடியாது. உண்மையை மறைக்க முடியாது. இதற்கெல்லாம் மோடி பதில் சொல்லி ஆக வேண்டும். மோடி அரசு கூண்டில் ஏறக்கூடிய காலம் நெருங்கி விட்டது.

நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் சிலிண்டர் விலையில் 200 ரூபாயை மோடி குறைத்துள்ளார். ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு 5 மாநில தேர்தல் வந்தபோது பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அப்போது தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினார். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.450க்கு சிலிண்டர் விற்கப்பட்டது. தற்போது ரூ.1000க்கு மேலாக சிலிண்டர் விற்கப்படுகிறது. அரசியலுக்காக, தேர்தலுக்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் காஸ் சிலிண்டர் விலையை ஏற்றுவார்கள். மோடி காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வைத்திருப்பது தனது நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோருக்காகதான். தேர்தல் முடிந்த மறுநாளே சிலிண்டர் விலையை மோடி உயர்த்துவார். இவை தேர்தல் நெருங்கும்போது மோடி செய்யும் விளையாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு: அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: