காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு: கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்சாலை, மேம்பால பணிகள், தனியார் கல்குவாரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று ஆரம்ப சுகாதார நிலையம், ஹூண்டாய் கார் தொழிற்சாலை, மேம்பால பணிகள், தனியார் கல்குவாரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனையினையும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கினார்கள். ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலையினை பார்வையிட்டு, கார் உற்பத்தி செய்யும் தொழில் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் படப்பையில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்குவாரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேனிங் மையம், டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு 2023-2024 தணிக்கைப்பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் உள்ளே ஆய்வு முடித்து விட்டு வெளியே வந்தபோது, பொது கணக்கு குழுவினருடன் வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை.

இரவு நேரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் 10 மாத்திரை எழுதிக் கொடுத்தால் இரண்டு மாத்திரைகள் மட்டும் கொடுத்து விட்டு மீதி எட்டு மாத்திரைகளை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர் என்று அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அவற்றிற்கெல்லாம் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது கணக்கு குழுவினர் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஈ.ஆர். ஈஸ்வரன், ஆ. கிருஷ்ணசாமி, எம்எல்ஏ சி.சரஸ்வதி, எஸ்.சேகர், எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட எஸ்பி. சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்புச் செயலாளர் பால சீனிவாசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு: கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: