வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம்: செப். 7ல் தேர் பவனி

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8 வரை 10நாட்கள் நடக்கிறது. தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் இன்று மாலை 5.45 மணிக்கு கொடியை புனிதம் செய்து வைக்கின்றனர். இதை தொடர்ந்து திருத்தலம் கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படும். பின்னர் பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடையும். அங்கு ஆண்டுபெருவிழா கொடியேற்றப்படும்.

கொடியேற்றத்தை காண வெளிமாவட்ட, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பேராலயம் மேல்கோவில், மாதாகுளம், பேராலயம் கீழ்கோவில் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி செப்டம்பர் 7ம் தேதி (வியாழன்) இரவு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம்: செப். 7ல் தேர் பவனி appeared first on Dinakaran.

Related Stories: