வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்: வரும் 7ம் தேதி தேர்பவனி

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வரும் 7ம் தேதி நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி இரவு கொடியேற்றதுடன் துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பெருவிழா நாளை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் கொடியை புனிதம் செய்து வைக்கின்றனர்.

பின்னர் பேராலய முகப்பிலிருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைகிறது. அங்கு பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றப்படும். விழாவையொட்டி நாளை மறுநாள் முதல் வரும் 7ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பேராலயம் மேல்கோவில், மாதாகுளம், பேராலயம் கீழ்கோவில்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி மொழிகளில் திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 7ம் தேதி இரவு நடக்கிறது. தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் தேரை புனிதம் செய்து வைக்கின்றனர்.

8ம் தேதி காலை வீண்மீன் கோயிலில் காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் அன்னையின் பிறந்த நாளையொட்டி சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படும். பின்னர் பேரலாய கீழக்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசியுடன் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவுபெறும். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று முதல் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இரவு, பகலாக இயக்கப்படுகிறது.

பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்கள் அமைத்து கடற்கரை சாலை, கடைவீதி சாலை, வேளாங்கண்ணி ஆர்ச், பூக்கார சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்: வரும் 7ம் தேதி தேர்பவனி appeared first on Dinakaran.

Related Stories: