சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்

*நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் வெளியீடு

நீடாமங்கலம் : சம்பா,தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இணை பேராசிரியர் சூ. அருள்செல்வி (பயிர் பெருக்கம் மற்றும் மரபியல்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு வேளாண். பல்கலைக்கழகம் பல்வேறு உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களை பல்வேறு பருவங்களில் பயிரிட அறிமுகப்படுத்தி வருகிறது.

125 முதல் 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களை, பின் சம்பா அல்லது தாளடி பருவங்களில் பயிரிடலாம். பின் சம்பா அல்லது தாளடி பருவம் செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடிவடைகிறது. இந்த பருவத்திற்கு கோ 56, ஏ.டி.டீ. 58, டி.ஆர்.ஒய். 4, ஏ.டி.டீ. 54, வி.ஜி.டி.1, கோ 52 மற்றும் டி.கே.எம் 13, என்று நிறைய ரகங்கள் உள்ளன.

கோ 56

கோயம்புத்தூரிலிருந்து 2023 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 130 முதல் 135 நாட்கள் வயதுடையது. ஒரு எக்டருக்கு சராசரியாக 6,372 கிலோ மகசூல் தரவல்லது.
இந்த ரகம் குலைநோய், பாக்டீரியா இலை கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், இலையுறை கருகல் நோய், துங்குரோ நோய், தண்டு துளைப்பான் மற்றும் ஆணைக்கொம்பன் போன்றவற்றிற்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது.

ஏ.டி.டீ. 58

2023 ம்ஆண்டு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறையிலிருந்து வெளியிடப்பட்டது. 125 நாட்கள் வயதுடையது. இந்த ரகம் தாளடி (அக்டோபர் – நவம்பர் விதைப்பு) பருவத்திற்கு ஏற்றது.

டி.ஆர்.ஒய். 4

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சியிலிருந்து 2021 ம்ஆண்டு வெளியிடப்பட்டது. இது 125 நாட்களில் ஒரு எக்டருக்கு 5,760 கிலோ மகசூல் தரக்கூடியது.

ஏ.டி.டீ. 54

இது தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறையிலிருந்து 2020 ம்ஆண்டு வெளியிடப்பட்டது. 130 லிருந்து 135 நாட்கள் வயதுடைய இந்த ரகம் தமிழ்நாட்டில் பின் சம்பா மற்றும் தாளடி பருவங்களுக்கு ஏற்றது. இந்த ரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6,305 கிலோ மகசூலும், அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 8,655 கிலோ மகசூலும் கொடுக்கவல்லது. இந்த ரகம் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னிக்கு மாற்று ரகமாக வெளியிடப்பட்டது.

வி.ஜி.டி. 1

இது வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகை அணையிலிருந்து 2019 ம்ஆண்டு வெளியிடப்பட்ட ரகம். 129 நாட்கள் வயதுடையது. திண்டுக்கல், தேனி திருச்சி, பெரம்பலூர், கரூர், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் பயிரிட ஏற்ற இந்த ரகம் ஒரு எக்டருக்கு 5,859 கிலோ சராசரி மகசூல் கொடுக்கக் கூடியது. பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்தது.

கோ. 52

கோயம்புத்தூரிலிருந்து 2017 ம்ஆண்டு வெளியிடப்பட்டது.130 லிருந்து 135 நாள் வயதுடைய இந்த ரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6,191 கிலோவும், அதிகபட்ச விளைச்சலாக 10,416 கிலோவும் கொடுக்கவள்ளது.

டி.கே.எம். 13

திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2015 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 130 நாட்களில் சராசரி விளைச்சலாக ஒரு எக்டருக்கு 5,938 கிலோ விளைச்சல் தரவல்லது. இது காவேரி டெல்டா பகுதியில் தாளடி பட்டத்திற்கும், மற்ற பகுதிகளில் சம்பா பட்டத்திற்கும் பயிரிட ஏற்றது.எனவே விவசாயிகள் இந்த ரகங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

The post சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் appeared first on Dinakaran.

Related Stories: