அதிமுக மாநாட்டில் வேகாத சாதம், கெட்டுப் போன புளியோதரை அதிருப்தியை ‘அட்ஜஸ்ட்’ செய்ய முக்கிய புள்ளிகளுக்கு அசைவ விருந்து: மொட்டை போட்டு மாஜி அமைச்சர் நேர்த்திக்கடன்

மதுரை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கெட்டுப்போன புளியோதரை வழங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க தென்மாவட்ட முக்கிய புள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் அசைவ விருந்து அளித்தார். இதனால் மற்றவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மதுரையில் அதிமுக மாநாடு கடந்த 20ம் தேதி வலையங்குளம் பகுதியில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தயிர்சாதம் மற்றும் புளியோதரை உள்ளிட்ட வகை, வகையான உணவுகள் வழங்கப்படும் என மாஜி அமைச்சர்களான உதயகுமார், செல்லூர் ராஜூ அறிவித்திருந்தனர்.

ஆனால், அப்படியே எதிர்ப்பதமாய் புளியோதரை, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதமே பிரதானமாக வழங்கப்பட்டன. பெரும்பாலான சாதங்கள் கெட்டுப்போகின. வேகாமலும் இருந்தன. இதனால், மாநாட்டிற்கு வந்தவர்கள் உணவை சாப்பிடாமல் தூக்கி வீசினர். டன் கணக்கில் உணவுகள் குப்பையாக மலைபோல் தேங்கி கிடந்தது. இது பெரும் விவாதப் பொருளாய் மாறியது. வலைத்தளங்களிலும் வைரலானது. அதிருப்தியை சமாளிக்கவும், தொண்டர்களை குளிர்ச்சிப்படுத்தவும் மாநாட்டு வெற்றியை கொண்டாடுவதாக கூறி, முக்கிய நிர்வாகிகளுக்கு கிடா விருந்து அளிக்கப்பட்டது.

அதன்படி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயிலுக்கு அதிமுகவினர் வந்தனர். அப்போது உதயகுமார் சாமிக்கு நேர்த்திக்கடனாக மொட்டை அடித்தார். பின் கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ விருந்து தயாரானது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இதில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்த வெளிமாவட்ட தொண்டர்களுக்கு கெட்டுப்போனதும், வேகாததுமாய் சமைத்த சாதங்களை கொடுத்து வீணடித்த மதுரை மாஜிக்கள், முக்கிய புள்ளிகளுக்கு மட்டும் அசைவ விருந்து வழங்கியது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக மாநாட்டில் வேகாத சாதம், கெட்டுப் போன புளியோதரை அதிருப்தியை ‘அட்ஜஸ்ட்’ செய்ய முக்கிய புள்ளிகளுக்கு அசைவ விருந்து: மொட்டை போட்டு மாஜி அமைச்சர் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: