மணிகண்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

திருச்சி : திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைத்தார். அதே சமயத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 195 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பறிமாறினார். திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி அளவில் ஏற்கனவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியதையடுத்து, நேற்று முதல் டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 947 அரசு பள்ளிகளில் பயிலும் 56,745 மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மணிகண்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: