தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 4வது முறையாக கைது: 22 நிமிடத்தில் விடுதலை ஆனார்

வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. இதில் ஜார்ஜியா மாகாணத்தில் தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்த டிரம்ப் உள்ளிட்ட 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே அனைவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் உள்ள புல்டன் கவுண்டி சிறையில் அமெரிக்க நேரப்படி 24-ம் தேதி இரவு 7 மணியளவில் டிரம்ப் சரணடைந்தார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டிரம்ப் கைதாவது இது நான்காவது முறையாகும். ஜார்ஜியா சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். இதனால் சுமார் 22 நிமிடங்கள் அவர் சிறையினுள் இருக்க நேரிட்டது. டிரம்ப் 6 அடி 3 அங்குலம் உயரம், 215 பவுண்டு (97கிலோ) எடை, பொன்னிற அல்லது ஸ்ட்ராபெரி கலர் முடி, நீல நிறக் கண்களுடன் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் சிறை அறையில் இருப்பவரின் எண் பி01135809 என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு ₹1.65 கோடி பிணைத் தொகை செலுத்திய பின் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நியூஜெர்சி புறப்பட்டார் இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவுக்கு சோகமான நாளாகும். தேர்தலுக்கு சவால் விட மக்கள் தயாராக வேண்டும். இந்த தேர்தல் ஒரு மோசடியான தேர்தல், முறைகேடான தேர்தல். அடுத்தாண்டு நடக்கும் தேர்தலிலும் முறைகேடு செய்யவே இப்படிச் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் நான் வெற்றி பெறுவது உறுதி,’’ என தெரிவித்தார்.

The post தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 4வது முறையாக கைது: 22 நிமிடத்தில் விடுதலை ஆனார் appeared first on Dinakaran.

Related Stories: