கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

கடலூர், ஆக. 24: கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் நேற்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதில் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு பணியை மேற்கொண்ட பின்னர் ஆய்வு குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியதாவது: சிப்காட் பகுதியில் 54 தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில் 44 தொழிற்சாலைகள் தற்போது இருக்கின்றன. இதில் 33 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடக்கிறது. சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பாதிப்பு தன்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு நடவடிக்கைக்காக ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார தன்மையை மேம்படுத்தும் வகையில் போதிய கழிவறைகள் இல்லை. பணியாளர்கள் தொடர்பாக முழுமையான அளவில் உள்ளூர் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொழிற்சாலையில் உள்ள கட்டிட தன்மையின் நிலையும் உறுதியாக உள்ளது என குறிப்பிடும்படி இல்லை. சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் பாதிப்பு தன்மை இருக்கின்றனவா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழுவினர் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை சென்னையில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்புடைய துறை செயலாளருடன் ஆலோசனை செய்து விட்டு முதல்வருக்கும் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். சுகாதார தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் இயக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரியவரும் நிலையில் இரண்டொரு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: