ஒன்றிய விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கை அதிக ஊழல் புகாருக்கு ஆளான ஒன்றிய உள்துறை அமைச்சகம்: அடுத்த இடத்தில் ரயில்வே, வங்கி

புதுடெல்லி: கடந்த ஆண்டு அதிக ஊழல் புகார்கள் ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீதும், அதைத் தொடர்ந்து ரயில்வே மற்றும் வங்கி பணியாளர்கள் மீதும் வந்துள்ளதாக ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 2022ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2022ம் ஆண்டில், ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள அனைத்து வகை ஊழியர்கள் மீது மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில், 85,437 புகார்கள் தீர்க்கப்பட்டு 29,766 புகார்கள் நிலுவையில் உள்ளன. இதில், 22,034 புகார்கள் 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் இருப்பவை. இதில் அதிகபட்சமாக உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 46,643 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. அடுத்ததாக ரயில்வேயில் 10,580 புகார்களும், வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்களும் பெறப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக 7,370 ஊழல் புகார்கள் பெறப்பட்டு 6,804 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,304 புகார்களும், தொழிலாளர் அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,236 புகார்களும், பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 2,617 புகார்களும், ஒன்றிய நேரடி வரிகள் வாரிய ஊழியர்கள் மீது 2,150 புகார்களும், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் மீது 1,619 புகார்களும், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் மீது 1,308 புகார்களும், நிதி அமைச்சக ஊழியர்கள் மீது 1,202 புகார்களும், மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய ஊழியர்கள் மீது 1,101 புகார்களும் வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஒன்றிய விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கை அதிக ஊழல் புகாருக்கு ஆளான ஒன்றிய உள்துறை அமைச்சகம்: அடுத்த இடத்தில் ரயில்வே, வங்கி appeared first on Dinakaran.

Related Stories: