ஸ்ரீலட்சுமிவராஹன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர் திருவள்ளூரில் 108 வைணவ தளங்களில் ஒன்றான ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் ஹிருதாபநாசினி குளக்கரை அருகே உள்ளது. இந்த கோயில் சிதிலம் அடைந்து காணப்பட்டதால் மூலவர், விமானம் மற்றும் ராஜகோபுரம் உள்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்தும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 17ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் பல்வேறு பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 6.45 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோயில் மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரம் விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீலட்சுமி வராஹன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது. உற்சவர் வீரராகவப் பெருமாள் லட்சுமி வராஹன் சன்னதியில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர்.

The post ஸ்ரீலட்சுமிவராஹன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: