விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணை.!

விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி தலைமையில் பட்டியலின மக்களுடன் விசாரணை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதர சமூகத்தினரை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அத்துடன் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு இந்து ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள இந்த கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினரை வழிபடுவதற்கு அனுமதிக்காமல் மறுப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக மயிலம், விக்கிரவாண்டி ,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்களும் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளீட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, பட்டியலின மக்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை பூட்டி சீல்வைத்து 145 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 145 தடை உத்தரவை நீக்கி, இரு தரப்பிற்கும் சுமூக உடன்பாடு ஏற்படுவதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 145 தடை உத்தரவால் கோயிலுக்கு அருகே 5க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணை.! appeared first on Dinakaran.

Related Stories: