பண மோசடி வழக்கில் முன் அனுமதியின்றி நடிகை ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி: நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரபலங்களை மிரட்டி 200 கோடி ரூபாய் வரை பணம் பறித்த வழக்கில் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே சுகேஷ் தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்பியதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கில் ஜாக்குலினுக்கு பட்டியாலா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி ஜாக்குலின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்கான விண்ணப்பத்துடன் 50 லட்சம் ரூபாய் பிணைய தொகை செலுத்தி பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின் அந்த தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பண மோசடி வழக்கில் முன் அனுமதியின்றி நடிகை ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி: நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: