அரிமளம் அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்

*பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது

திருமயம் : அரிமளம் அருகே கோயில் ஆடி படப்பு திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மேல்நிலைப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோயில் ஆடி படப்பு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் விழாவை முன்னிட்டு நேற்று காலை 5ம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டுவண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. இதில் மொத்தம் 23 ஜோடி மாடுகள், 17 குதிரைகள் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசு மேற்பனைக்காடு இடும்பன், 2ம் பரிசு கே.புதுப்பட்டி கேஏ அம்பாள், 3ம் பரிசு பாலக்குடிப்பட்டி பதினெட்டாம்படி கருப்பர், 4ம் துவரங்குறிச்சி விசாலாட்சி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 16 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு கே.புதுப்பட்டி கே ஏ அம்பாள், பாலக்குடிப்பட்டி பதினெட்டாம்படி கருப்பர், 2ம் பரிசு கொல்லக்குடி கண்ணன், கரையபட்டி துரைராஜ், 3ம் பரிசு தஞ்சை அம்மன் பேட்டை செல்வம், 4ம் பரிசு ஆத்தூர் ராமநாதன், சொக்கலிங்கம்புதூர் சக்தி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இறுதியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 17 குதிரைகள் கலந்து கொண்டன. குதிரை பந்தயம் இரண்டு பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. இரண்டு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டிகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. விழாவில் பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரை, மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற மேல்நிலைப்பட்டி – அரிமளம் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்நிலைப்பட்டி ஊர்காரர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அரிமளம் அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: